அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் என்மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன – செந்தில் பாலாஜி விளக்கம்

NerNokkuNerNokku
2 min read

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி . 2017ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் செயல்பட்டு வந்த செந்தில் பாலாஜி, 2018ஆம் ஆண்டு உறுதியில் திமுகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. 2019 இடைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகரித்தது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்தார் ஸ்டாலின். கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறாத நிலையில், அங்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமனம் செய்தார். இதனையடுத்து, கோவையில் திமுகவை வளர்க்க பல்வேறு முயற்சிகளை செந்தில்பாலாஜி எடுத்தார். அதே சமயம் அதிமுக ஆட்சியில் நடந்த பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை கையில் எடுத்து செந்தில் பாலாஜியை 2023ஆம் ஆண்டு கைது செய்தது.

கோவையில் செந்தில் பாலாஜியின் பணிகளால் திமுகவின் செல்வாக்கு அதிகரிப்பதால் பாஜக அமலாக்கத் துறையின் மூலம் அவரை முடக்க முயற்சி செய்வதாக திமுக வெளிப்படையாகக் குற்றம்சாட்டியது. சுமார் 14 மாத சிறை வாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததால் செந்தில் பாலாஜி வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், டாஸ்மாக் முறைகேடு என அமலாக்கத் துறை மீண்டும் செந்தில் பாலாஜியை குறி வைத்தது. அதே சமயம் பண மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியதால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனாலும் தற்போது திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக செந்தில்பாலாஜி உள்ளார். கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று கூட செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை அவருடைய வாழ்நாள் முடியும் வரை விசாரித்து முடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் கரூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் செந்தில் பாலாஜி இன்று கலந்துகொண்டார். அப்போது மாணவி ஒருவர் அவர் மீதான வழக்குகள் குறித்தும், அவர் கைது செய்யப்பட்டது குறித்தும் கேட்டார். அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, “அரசியல் களத்தில் மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள் குறுக்கு வழிகளை பயன்படுத்தி, தேர்தல் களத்தில் நான் நிற்கக்கூடாது என்பதற்காக வழக்குகளை பதிந்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர முயற்சிக்கிறார்கள். நிச்சயம் அவர்களின் கனவு நிறைவேறாது.

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கூறப்பட்டவை. நிச்சயம் இந்த வழக்குகளில் இருந்து நான் விடுதலையாகி வெளியே வருவேன். நான் தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்ளக் கூடியவன். எனக்கு தொடர்பு இல்லாத ஒரு வழக்கை தாக்கல் செய்து, அவர்கள் காவல் துறையை வைத்து ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். நிச்சயமாக அவர்கள் எண்ணம் நிறைவேறாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

0
Subscribe to my newsletter

Read articles from NerNokku directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.

Written by

NerNokku
NerNokku