செங்கோட்டையன் வீழ்ச்சிக்கான செந்தில் பாலாஜியின் திட்டம்: ஈரோடு மாவட்டம் திமுகவின் கட்டுப்பாட்டுக்கு வருமா?


ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பல ஆண்டுக்காலமாக அதிமுகவின் கையே ஈரோடு மாவட்டத்தில் ஓங்கியுள்ள நிலையில், செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் புதிய அரசியல் வரலாற்றை எழுத தயாராகி வருகின்றனர்.
'நேருக்கு நேர்' நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கட்சியினரைத் தனித்தனியாக சந்தித்த ஸ்டாலின், ‘ஈரோட்டின் அ.தி.மு.க. ஜாம்பவான்களான செங்கோட்டையனையும் கருப்பண்ணனையும் வீழ்த்த வேண்டும். ஈரோட்டை தி.மு.க கோட்டையாக மாற்றவேண்டும்' என சொன்னபோது செந்தில் பாலாஜி கொடுத்த ரியாக்ஷன்தான் ஈரோடு அரசியலில் ‘டாக் ஆஃப் தி டவுன்’.
முதல்வருக்கு செந்தில்பாலாஜி கொடுத்த உறுதி:
சமீபத்தில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 'நேருக்கு நேர்' சந்திப்பில் முதல்வரை சந்தித்துவிட்டு வந்த ஈரோடு மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் இதுபற்றி பேசினோம். "நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முதல்வரைச் சந்தித்தபோது, எங்கள் ஈரோட்டைச் சேர்ந்த நிர்வாகிகள் யாருமே உடன் இல்லை. செந்தில் பாலாஜி மட்டுமே அமர்ந்திருந்தார். முதல்வர் எங்களிடம் கேள்வி கேட்கும்போது அதற்கு நாங்கள் சொல்லும் பதில்களை செந்தில் பாலாஜியும் குறிப்பு எடுத்துக்கொண்டார்.
தொகுதியில் உள்ள பொதுவான பிரச்னைகள், உட்கட்சி பிரச்னைகள் பற்றி பேசிய முதல்வர், 'இந்த முறை ஈரோடு மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க கட்டாயம் வெற்றிபெற வேண்டும்' என சொன்னபோது, செந்தில் பாலாஜி தன் நெஞ்சில் கை வைத்து அதை ஏற்றுக்கொண்டார்.
அதிமுகவின் செல்வாக்கிற்கு காரணம் என்ன?
எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் அரசியல்ரீதியாக எதிரிகளாகவும், தொழில்ரீதியாக நட்பாகவும் இருப்பார்கள். இங்கு கிராமங்கள் அதிகளவில் இருப்பதால் எங்களைவிட இங்கு அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான். எங்கள் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில் கோபிசெட்டிப்பாளையம், பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய ஐந்து தொகுதிகளில் எங்களைவிட அ.தி.மு.க. வலுவாக இருக்கிறது.
இதற்குக் காரணம், தொகுதிகளில் நடக்கும் எல்லா சுப, துக்க நிகழ்ச்சிகளிலும் செங்கோட்டையனும், கருப்பண்ணனும் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு இணையாக தி.மு.க.வினர் யாரும் கலந்துகொள்வதில்லை. இப்படி பொதுமக்களோடு, தி.மு.க.வினரை விட அ.தி.மு.க.வினர் மிகவும் நெருங்கி இருப்பதால்தான் ஈரோடு மாவட்டத்தில் அதிமுக பலமாக இருக்கிறது. அதனால்தான் கடந்த தேர்தலில் மொடக்குறிச்சியில் அதிமுகவின் கூட்டணியில் இருந்த பா.ஜ.க. வெற்றி பெற்றது.
செங்கோட்டையனை வீழ்த்துவது எளிதா?
தி.மு.க. தரப்பில் இப்போது மண்டலப் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி வந்திருக்கிறார். அவருடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணியாற்றிய அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அவருடைய தேர்தல் வியூகம் வித்தியாசமாக இருப்பதால், இம்முறை அதிமுக ஜாம்பவான்களான செங்கோட்டையன், கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம் ஆகியோரை வீழ்த்தி ஈரோட்டை தி.மு.க கோட்டையாக மாற்றுவார் என்று நம்புகிறோம்' என்றார்.
கோபியில் செங்கோட்டையனை வீழ்ந்த முடியுமா? என்று தி.மு.க மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரனிடம் கேட்டோம். 'பலமான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால்தான் செங்கோட்டையன் ஒவ்வொரு முறையும் கோபிசெட்டிபாளையத்தில் வெற்றிபெறுகிறார். 1996ம் ஆண்டு தேர்தலில் சாதாரண சைக்கிள் கடை வைத்திருந்த தி.மு.க. வேட்பாளர் வெங்கிடு என்பவரிடம் செங்கோட்டையன் தோற்கவில்லையா? கடந்த தேர்தலில்கூட செங்கோட்டையனை எதிர்த்து தி.மு.க. நிற்காமல் காங்கிரஸில் மக்களுக்கு அறிமுகம் இல்லாத சரவணன் என்பவருக்கு சீட் கொடுத்தார்கள். அதனால்தான் செங்கோட்டையன் ஈசியாக வெற்றி பெற்றார்.
இப்போது நிலைமையே தலைகீழாக இருக்கிறது. மேற்கு மண்டலப் பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகம் எனக்கு நன்றாகத் தெரியும். கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக நிற்கிறார். நான் அப்போது அதிமுகவில் சிப்காட் சேர்மனாக இருந்தேன். அவருக்கு எதிராக நிற்கும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்காக தேர்தல் பணி செய்ய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து வரவைக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளும் அரவக்குறிச்சியிலேயே தங்கியிருந்து தேர்தல் பணியாற்றினோம்.
செந்தில்பாலாஜியும் தேர்தல் வியூகமும்:
ஒரு முதலமைச்சர் தலைமையில் அமைச்சர் பட்டாளமே அரவக்குறிச்சியில் களம் இறங்கியம் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி தான் வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்கிற வழக்கத்தை உடைத்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி பேதம் இல்லாத அபரிவிதமான நடுநிலையாளர்களின் ஆதரவோடு அரவக்குறிச்சி தொகுதியில் களமிறங்கிய பாஜக வேட்பாளர் அண்ணாமலையை எதிர்த்து தி.மு.க.வில், சாதாரணப் பின்னணிகொண்ட இளங்கோவை களம் இறக்கி விட்டுத் தோற்கடித்தார்.
செந்தில் பாலாஜிக்கு தேர்தல் மேஜிக் அத்துப்படி. அதனால் எங்களுக்கு கவலை இல்லை. செங்கோட்டையன் இன்றைய தேதிக்கு அப்டேட்டில் இருப்பார். செந்தில் பாலாஜி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்கிற அப்டேட்டில் இருப்பார். அதனால் இந்த முறை கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் தோற்பது உறுதி' என்றார்.
Subscribe to my newsletter
Read articles from Puthiya Paarvai directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.
Written by
