ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழகம் வருகை – சென்னை விமான நிலையத்தில் கடும் பாதுகாப்பு


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருப்பதை முன்னிட்டு, சென்னை பழைய விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முர்மு செப்டம்பர் 2, செவ்வாய்க்கிழமை காலை 11.40 மணிக்கு மைசூரிலிருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானத்தில் சென்னைக்கு வருகிறார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. திங்கட்கிழமை காலை முதல் புதன்கிழமை இரவு வரை விமான நிலையம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்திலிருந்து புறப்படும் ஜனாதிபதி, நந்தம்பாக்கம் வர்த்தக மைய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். பின்னர், கிண்டி ராஜ்பவனில் தங்குவார்.
அடுத்த நாள் (செப்டம்பர் 3) முர்மு திருச்சி சென்று மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூரில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். பயணத்தின்போது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்வதும் திட்டத்தில் அடங்குகிறது. பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.
ஜனாதிபதி பயணத்தை முன்னிட்டு, CISF, SPG, மத்திய உளவுத்துறை, சென்னை காவல்துறை ஆகியவற்றின் மேற்பார்வையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய சரக்கு மற்றும் கூரியர் சேவை அலுவலகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும். தற்காலிக ஊழியர்களுக்குக் கூட பல அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு பின் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to my newsletter
Read articles from Puthiya Paarvai directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.
Written by
